Thursday, January 21, 2016

நான் ஒரு நாடகக்காரன் - 4

இப்போது ஹாலுக்குள் இருக்கும் மூவரைப் பற்றியும் ஒரு சித்திரம் கிடைத்துவிட்டது. ஆனால், இது போதாது. கிடைத்தவற்றை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

இப்போதும் அவர்களுடைய இறுக்கம் முழுமையாக நீங்கியபாடில்லை. இந்நிலையில் அவர்களை வெளிப்படுத்த வைப்பது கடினம் என்பதால், அவர்களை மேலும் லகுவாக்க வேண்டும்.

இன்று …. வரையறுக்கப்பட்ட எந்தவொரு பாடத்திட்டத்துடனும் நான் வரவில்லை. எனவே, அவர்களின் மனதை லகுவாக்க என்ன செய்யலாம் என்ற யோசனை ஓடிக் கொண்டேயிருந்தது.

‘ஆளுக்கொரு பாட்டுப் பாடுங்க’ – நான்.

எல்லா பயிற்சி வகுப்புகளிலும் நடப்பது போலவே நடந்தது. முதலில் … ‘பாட்டா?’ ‘எனக்குப் பாடவராது’ ‘ரெண்டு வரிதான் தெரியும்’ ‘நான் பாடுனதே கெடயாது’ என்றெல்லாம் பிகு பண்ணினார்கள்.

‘நான் உங்கள கச்சேரி பண்ணச்சொல்லல. தெரிஞ்ச அளவுக்கு ரெண்டு ரெண்டு வரி பாடினாக்கூடப் போதும்.’ என்றதும், சற்று தைரியம் வந்து 
பாட ஆரம்பித்தார்கள்.
60 வயது ஆண் ‘எனக்கு தமிழ் பாட்டு தெரியாது.’ என்று, இந்திப் பாடல்களாகப் பாடினார்.

கொஞ்சம் கொஞ்சமாக அது திட்டமிடாமலே அந்தாக்ஷரி ஆயிற்று. ‘நல்லது நடந்தா சரிதான்’ என நானும் விட்டுவிட்டேன். கொஞ்சம் கொஞ்சமாக இறுக்கம் விலகி உற்சாகம் பரவத் தொடங்கியது. 60 வயது ஆண் ‘ஆராதனா’ ‘கட்டிபடாங்’ ‘சில்சிலா’ ‘மேரா நாம் ஜோக்கர்’ என்று பழைய இந்திப் பாடல்களாக பாடித் தள்ளினார். நவநாகரீகமாக இருந்த அந்தப் பெண்ணோ லேட்டஸ்ட் குத்துப்பாட்டுகளாக பாடினார். 40 வயது ஆண் எம்.ஜி.ஆர் பாடல்களாக பாடினார். 60 வயது ஆணும் அந்தப் பெண்ணும் ஓரளவுக்கு நன்றாகப் பாடினார்கள். 40 வயது ஆண் தாளம் சுதி என எதைப் பற்றியும் கவலைப்படாமல் பாடினார். ஆனால், அவர்தான் நிறைய பாடல்கள் பாடினார். அவருக்குத் தெரிந்த, தெரியாத பாடல்களை எல்லாம் பாடினார்.

மற்ற இருவரும் தங்களுக்கு தெரிந்ததைப் பாட, அவரோ தனக்கு தெரியாத பாடல்களைக்கூட பாடினார். பாடினார். பாடிக் கொண்டேயிருந்தார். வகுப்பில் இரண்டாவது ரேங்க் எடுத்த மாணவன் பெற்றோர்களால் மிரட்டப்பட்டு, முதல் ரேங்குக்காக கடும் பிரயத்தனப்படுவது போல் அது இருந்தது. தன்னை ஸ்தாபித்தே ஆகவேண்டும் என்ற வெறியை முகத்தில் காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்து கொண்டிருந்தார். அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றார் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், நானோ அவரது மனதை வாசிக்க முயற்சி செய்து கொண்டிருந்தேன். அது…  தன்னால் நன்றாக பாடமுடியாத தோல்வியில் துவண்டு கிடந்தது. அது அவரை இன்னும் வெறி கொள்ளச் செய்தது. அந்த ஹால் முழுவதும் சுதியற்ற, தாளம் குலைந்து போன எம்.ஜி.ஆர் பாடல்களால் நிரம்பிக் கிடந்தது. அவரோ நெருப்பாக கனிந்து கொண்டிருந்தார்.
அவரது இந்த இயல்பின் பிண்ணனியில் நான் சென்ற அத்தியாயத்தில் கூறியிருந்தவாறு ஒரு பெரிய மர்ம முடிச்சு கொண்ட ரகசியம் இருக்கத்தான் செய்தது.

அவரிடம் மட்டுமல்ல … மற்ற இருவரிடமும்கூட சில ரகசியங்கள் ஒளிந்து கிடந்தது நன்றாகவே தெரிந்தது.

இது மற்றவர் ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் என தவறாக நினைக்காதீர்கள். பயிற்சியில் பங்கு கொள்பவர்களின் ரகசியங்கள் அறிந்து கொள்வது, அவர்களைப் பயிற்றுவிக்கும் முறைகளை தீர்மானிக்கவும் கையாளவும் எளிதாக இருக்கும்.

இது …. பயிற்சிகளின்போது அவர்கள் பேசுவது, நடந்து கொள்வது மற்றும் முக உணர்வு வெளிப்பாடுகளை வாசிப்பதன் மூலம் அறிந்து கொள்வது.

மற்றொரு முறையும் உண்டு. அவர்களிடம் நேரடியாகப் பேசுவதன் மூலம் அவர்களிடமிருந்து கேள்விகள் கேட்டு அவர்களைப் பற்றிய அந்தரங்கங்களை வெளியிடச் செய்வது. இது அவர்களது மனத்தடையை உடைத்து வெளிவர உதவியாக இருக்கும். ஒரு நடிகருக்கு மிக முக்கியமானது … மனத்தடை உடைத்தல். நான் எனது பயிற்சிப் பட்டறைகளில் மிகு முக்கியத்துவம் கொடுப்பது நடிகர்களின் மனத்தடை உடைப்பதற்குத்தான். அதுவே அவர்களுக்கு பல விஷயங்களை கற்றுக் கொடுத்துவிடும்.

அந்தரங்கங்களை வெளிக் கொணரும் இந்தப் பயிற்சி கிட்டத்தட்ட ஒரு கவுன்சிலிங் போன்றே நடைபெறும். தனித்தனியாக ஒவ்வொருவரிடமும் பேசியாக வேண்டும்.. மெதுமெதுவாக அவர்களைப் பேசவிட்டு, பொறுமையுடன் காத்திருக்க வேண்டும். இந்தப் பயிற்சி ஒரு நடிகருக்கே நான்கு மணி நேரம், ஐந்து மணி நேரம் ஆகும். சிலருக்கு ஒருநாள் கூட ஆகும். அதற்கு நேரம் ஒதுக்கியாக வேண்டும். இதில் … நான் பேசுவது மிகக் குறைவாகவே இருக்கும். நடிகர்களை நிறையப் பேசவிட வேண்டும். எனது பொறுப்பு சிறுசிறு கேள்விகள் கேட்டு அவர்களை தூண்டிவிடுவது மட்டுமே. சிலர் நேரடியாக பதில் கூறுவார்கள். இவர்களது session சீக்கிரம் முடிந்துவிடும். சிலர் சுற்றிச் சுற்றி பேசிக் கொண்டே இருப்பார்கள். ஆனால், பதில் சொல்லமாட்டார்கள். இவர்களிடம் சின்னச்சின்ன துணைக் கேள்விகள் கேட்டு, பதிலை வரவழைக்க வேண்டும். அவர்கள் சுற்றிவளைத்துப் பேசுவதை பொறுமையாக கேட்க வேண்டும். கேட்ட அந்தரங்க விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமில்லை. மூடி வைத்திருந்த அந்தரங்கங்களை வெளிக் கொண்டு வருவதன் மூலம் அவர்கள் மனத்தடை உடைப்பது மட்டுமே நோக்கம்.

இங்கு நான் அப்படி பிரத்தியேகமான எந்தப் பயிற்சியையும் கடைப்பிடிக்காமலே கண்டறிந்த ரகசியங்களை மட்டுமே குறிப்பிடுகிறேன். உடனே, அந்த ரகசியங்களை அறிந்து கொள்ளும் ஆர்வத்தில் நிமிர்ந்து அமர்வீர்களேயானால், மன்னிக்கவும் …. முன்பு போலவே நீங்கள் தளர்வாக அமர்ந்து கொள்ளுங்கள். நான் அந்த ரகசியங்களை பகிர்ந்து கொள்ளப் போவதில்லை. அது குருவுக்கும் சிஷ்யர்களுக்கும் இடையிலான ரகசியம். அதை பரகசியமாக்கும் எண்ணம் எனக்கு சிறிதும் இல்லை.

ஆனால், அந்த ஒளிந்து கிடக்கும் ரகசியங்கள் எனது பணியை கடினமாக்கும்  வல்லமை கொண்டவை என்பது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும். மூன்றே பேர்தான் என்றாலும் மறுநாள் வகுப்பிற்கு வருமுன் நான் நன்றாக தயார்படுத்திக் கொண்டுதான் வர வேண்டும் என்ற எண்ணம் உள்ளோடிக் கொண்டிருந்தது.
மட்டுமல்ல; மறுநாள் புதிதாக ஒரு பெண்மணியும் வகுப்பில் கலந்து கொள்வார். அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள பிரத்தியேகமாக நேரம் ஒதுக்க முடியாது. எனவே, மறுநாள் பயிற்சி தொடங்கும் முன்பே அவரைப் பற்றி அவரையே விரிவாகப் பேசவிட்டு, ஓரளவுக்காவது அவரைப் பற்றித் தெரிந்து கொண்ட பின்பு பயிற்சிகளைத் தொடரலாம் என்று திட்டமிட்டேன். அதற்கேற்றாற் போலவே பாடத்திட்டங்களையும் வகுத்துக் கொண்டேன்.

மறுநாளிலிருந்து பயிற்சிகள் இயக்குநருக்குச் சொந்தமான விருந்தினர் மாளிகையில் என்று சொன்னார்கள்.

சென்றேன். நேற்று வந்த மூவரும் காத்திருந்தார்கள். புதிதாக வரப்போகும் பெண்மணி சற்று தாமதமாகத்தான் வருவார் என்று ஒருங்கிணைப்பாளர் தகவல் தெரிவித்து, என் திட்டத்தை முதலிலேயே காலி பண்ணினாரென்றால், அந்தப் பெண்மணி வந்தபின் நடந்தவை நான் வகுத்த திட்டத்தை தவிடுபொடியாக்கின.  

     - யதார்த்தன் இளஞ்சேரன்





நான் ஒரு நாடகக்காரன் - 3

நான் அந்த படநிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்றேன். ஓர் உதவி இயக்குநர் என்னை ஒரு ஹாலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவர் மட்டும் அமர்ந்திருந்தார்கள்.

ஒரு பெண். ஓர் ஆண்.

பெண்ணிற்கு 28-30 வயதிருக்கலாம். ஏற்கெனவே பார்த்த முகம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவார். பரவலாக ஓரளவிற்கு அறிமுகமானவர். ஆனால், தொலைக்காட்சியில் பார்த்ததைவிட இளைத்திருந்தார். ‘ஆக்சன்’ என்று சொன்னால் உடனே நடிக்க ஆயத்தமாகிவிடுவது போல் உடையணிந்திருந்தார்.

ஆணிற்கு 60 வயதிருக்கும். என்னை விட (நானே சற்று பருமனான சரீரக்காரன்தான்) இருமடங்கு சரீரத்துடன் இருந்தார்.

இருவரும் அமைதியாகவே அமர்ந்திருந்தார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகமில்லை போலும்.

‘இன்னொருத்தர் வந்துக்கிட்ருக்காரு.’ – உதவி இயக்குநர் சொன்னார்.

‘நாலஞ்சு பேருன்னு சொன்னீங்களே!’ என்றேன்.

‘மொத்தம் நாலு பேருதான். இன்னைக்கு மூணு பேரு மட்டும்தான். நாளைக்கு இன்னொருந்தங்க வந்து ஜாய்ன் பண்ணிக்குவாங்க’ என்றார் உதவி இயக்குநர்.

காத்திருந்தோம். சற்று நேரத்தில் அந்த இன்னொருத்தர் வந்தார். 40 வயது. நடுத்தர உடம்புவாகு. ஹாலுக்குள் இருந்த அமைதி பயந்துபோய் சட்டென வெளியேறிற்று
.
உதவி இயக்குநருக்கு ஒரு ஹலோ சொன்னவர், அந்தப் பெண்ணிடம் சரசரவென வறுத்துத் தள்ள ஆரம்பித்தார். உதவி இயக்குநர் புன்னகை மாறாமலே, இடைப் புகுந்து என்னை அவர்களுக்கும் அவர்களை எனக்கும் அறிமுகப்படுத்தினார்.

அறிமுகமென்றால், நீட்டி முழக்கி …. முழுவிபரங்களும் என்று கற்பனை செய்து கொள்ளவேண்டாம். என்னைக் காட்டி ‘இவர்தான் உங்களுக்கு ட்ரெய்னிங்க குடுக்க வந்திருக்காரு’ என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, அவர்களின் பெயர்களை மட்டும் சொல்லி எனக்கு அறிமுகப்படுத்திவிட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறியதும் ஒரு இருபத்தொன்பது வினாடிகளுக்கு அமைதி நிலவியது. அது வகுப்பை ஆரம்பிக்க எனக்கு அளிக்கப்பட்ட அவகாசம் போலும்.

மீண்டும் 40 வயதுக்காரர் பேச ஆரம்பித்தார். அந்தப் பெண்ணும் அவரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். 60 வயதுக்காரரும் அந்த உரையாடலில் அவ்வப்போது கலந்து கொண்டார்.

நான் அமைதியாக அமர்ந்து அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரை …. உதவி இயக்குநர் வெளியேறியதுமே வகுப்பு ஆரம்பித்துவிட்டது.

இன்றைய வகுப்பு அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதுதானே? நான் ஒவ்வொருவரையும் இயல்பாக பார்ப்பதுபோல் பார்வையை வீசினாலும் வெகு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்
.
ஏனென்றால், அவர்களை பயிற்றுவிக்க எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் கால அவகாசம் மிகக் குறைவு.

பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருமே அவரவர் பணிகளில் மிகவும் பிஸியாக இருப்பவர்கள். வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) மட்டுமே அவர்களால் நேரம் ஒதுக்க முடியும். அதுவும் காலை பத்து மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை மட்டுமே.

இந்த விஷயங்கள் எல்லாம் முன்பே எனக்கு சொல்லப்பட்டுவிட்டன.

அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்க இருப்பதால், இந்த மாதத்திற்குள் அவர்களை தயார்படுத்தியாக வேண்டும்.

எட்டு வகுப்புகள் மட்டுமே. அதில் கடைசி இரண்டு வகுப்புகள் டயலாக் பேப்பரோடு அவர்களை பயிற்றுவிக்க வேண்டி வரலாம். எனவே, அவர்களை தயார்படுத்துவதற்கென உண்மையில் இருப்பது ஆறே வகுப்புகள்தான் …. அதுவும் நேரக் கட்டுப்பாடுடன்.

இன்றைக்குள் அவர்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான பயிற்சிகளை தெரிவுசெய்து அவர்களை தீவிரமாக பயிற்றுவிக்க முடியும்.

அவர்களை ஆழ்ந்து கவனித்ததில் … ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.

வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் …. மூவருமே நிறைய டென்ஷனுடன் இருந்தார்கள். பேச்சு பேச்சுவாக்கில் போய்க் கொண்டிருந்தாலும் அவர்களது கவனம் முழுக்க என்மீதே இருந்தது.

டென்ஷனுக்குக் காரணம் மிக எளிமையானது. அவர்களுக்கு நடிப்பு பயிற்சிப் பட்டறை குறித்து யாதொன்றும் தெரியாது. எனவே, என்ன மாதிரி பயிற்சி கொடுக்கப் போகிறேன் என்ற கேள்வியும் பயிற்சிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும்தான் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

இது ஒருவிதத்தில் நேர்மறையான எண்ணமாகத் தோன்றலாம். ஆனால், பயிற்சிகளில் இந்த எண்ணம் அப்படியே எதிர்மறையாக செயல்படும்.

சட்டென நான் பேச ஆரம்பித்தேன்.

‘இன்னைக்கு நான் எதுவும் பயிற்சி கொடுக்கப் போறதில்ல. இன்னைக்கு முழுக்க நான் உங்களப் பத்தி தெரிஞ்சுக்கப் போறேன்’ என்று நான் சொன்னதும் அவர்கள் முகத்தில் சட்டென ஓர் ஆசுவாசம் பரவியதை என்னால் உணரமுடிந்தது.

‘சரி. உங்களப் பத்தி நீங்களே சொல்லுங்க. நான் தெரிஞ்சுக்கிறேன்’ என்றேன்.

சற்று அமைதி நிலவியது.

‘நீங்களே ஒவ்வொருத்தரா அவங்கவங்களைப் பத்தி சொல்லுங்க.’ என்றதும் நாற்பது வயதுக்காரர் ஆரம்பித்தார் ஒரு கேள்வியுடன்.

‘என்ன சொல்லணும்?’

‘எந்தக் கட்டுப்பாடும் இல்லை. உங்களப் பத்தி என்னென்ன சொல்லணும்னு தோணுதோ, அது எல்லாத்தயும் சொல்லுங்க’ என்றதும் முதலில் அவரே ஆரம்பித்தார். அடுத்து அந்தப் பெண். கடைசியாக 60 வயதுக்காரர்.

இடையிடையே, வேண்டியபோது மட்டும், நான் சின்னச்சின்ன கேள்விகள் கேட்டு பதில்கள் வாங்கினேன்.

அவர்கள் பேசியது முழுவதையும் இங்கு சொல்வதென்றால் நீண்டுகொண்டே போகும். எனவே, சுருக்கமாக அவர்கள் சொன்னதை இங்கே தருகிறேன்.

60 வயதுக்காரர் ….. சாஃப்ட்வேர் கம்பெனிகளை அதற்கான ஒரு டீமுடன்  உருவாக்கி பின் அதை விற்றுவிடுவது இவரது தொழில். இயக்குநரின் நண்பர். இவரது வீட்டிலுள்ள ஹோம் தியேட்டரில் இயக்குநருடன் அமர்ந்து பானம் அருந்தியவாறு உலகத் திரைப்படங்கள் பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு. பார்ப்பது மட்டுமே. நடிக்கும் ஆசை வந்ததேயில்லை. திடீரென இயக்குநர் நடிக்குமாறு சொல்ல, ஒத்துக் கொண்டுவிட்டார். நடிப்பை தொழிலாகத் தொடரும் எண்ணம் அறவே இல்லை.

28 வயது பெண் ….. “தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது எனது வேலை. சினிமாவில் நடிக்கும் எண்ணம் இருந்ததில்லை. இயக்குநரின் குடும்ப நண்பர். நடிக்கச் சொன்னார். ஒத்துக்கொண்டேன். இந்தக் காலம் எனது வாழ்வில் பெரிய பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் ஓர் இக்கட்டான காலம். எனது வருங்கால வாழ்க்கை இப்படியே தொலைக்காட்சியோடு முடிந்து விடுமா? அடுத்து என்ன? என்ற கேள்வி எழுந்து விஸ்வரூபமாய் நிற்கும் காலம். இதிலிருந்து மீண்டு சற்று நம்பிக்கை கொடுக்கும் விதமாய் இந்த வாய்ப்பு. இது தொடருமா என்பதையெல்லாம் இப்போது என்னால் சொல்லமுடியவில்லை.”

40 வயது ஆண் …. நிறையப் பேசினார். ஆனால், தெளிவற்று அங்குமிங்கும் பேச்சு தாவிக் கொண்டே இருந்தது. இடையில் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களிலிருந்து மட்டுமே அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு கல்லூரியின் அறக்கட்டளைத் தலைவர். குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வது அவரது மற்றொரு வேலை. இவை தவிர, அவருக்கு மிக முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. அது …. விருந்துகளில் கலந்து கொள்வது. அவரது பள்ளிக்காலங்களில் சின்னதாய் ஆரம்பித்த விருந்துகள் இப்போது பெரிதாகி, பெரும்பாலான நாட்களில் விருந்து முடிந்து வீடு திரும்ப இரவு இரண்டு மணி ஆகிவிடும். அவர் விருந்து கொடுப்பார் …. அல்லது நண்பர்கள் அளிக்கும் விருந்துகளில் கலந்து கொள்வார். நாம் பெரிய பிரமுகர்கள் என்று நினைக்கும் பலர் அவரது நெருங்கிய நட்பு வட்டத்தில். இவருக்கும் நடிக்கும் ஆசையெல்லாம் இருந்ததில்லை. இயக்குநரின் குடும்ப நண்பர். இயக்குநர் நடிக்கச் சொன்னார். ஒத்துக் கொண்டார். நடிப்பைத் தொடர்வதா இல்லையா என்று எந்த முடிவும் இதுவரை இல்லை.

இதுவரை நான் நடிப்புப் பயிற்சி அளித்ததெல்லாம் …. சினிமாவே வாழ்க்கை என்ற உறுதி கொண்டு நடிப்பார்வத்துடன் …. இல்லையில்லை … வெறியுடன் அலைபவர்கள்.  இப்போது என் முன் இருப்பது வேறுமாதிரியானதொரு சூழல். ஆனால், நான் இதையும் எதிர்கொண்டுதான் …. இல்லை …. நேர்கொண்டுதான் ஆகவேண்டும்.

இவர்கள் யார்? என்று தெரிந்து கொண்டாகி விட்டது. அடுத்து, இவர்கள் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும். (ஆங்கிலத்தில் …. Who are they?க்கும் what are they?க்கும் உள்ள வேறுபாடுதான்). அப்போதுதான் இவர்களுக்கான பாடத்திட்டங்களை வகுக்க முடியும்.

ஹாலைச் சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டேன். வாகாய் இருந்தது நாற்காலிகள் மட்டுமே. ஒரு நாற்காலியை எடுத்து ஹாலின் நடுவே வைத்தேன்.

‘இந்த நாற்காலியை நீங்கள் பயன்படுத்தவேண்டும்.’

‘பயன்படுத்தணும்னா …. எப்படி?’ நீங்கள் நினைத்தது சரிதான்.            40 வயதுக்காரர்தான்.

‘எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இது ஒரு நாற்காலிங்கிறத மனசுல வச்சுக்கிட்டு அதை விதவிதமா பயன்படுத்தணும். அது … வெறும் பயன்படுத்துதலா இல்லாம … அந்த நாற்காலியோட ஒரு தொடர்பை  உண்டாக்கணும்’.

ஒவ்வொருவராக வந்து கொடுத்த பயிற்சியை கச்சிதமாகச் செய்தார்கள்.      60 வயதுக்காரரிடம் மட்டும் இடையிடையே சின்னத் தயக்கம். மற்றபடி பெரிதாக எந்தப் பிரச்சனையும் இல்லை.

‘இப்ப … இது நாற்காலி இல்லை. இப்ப இதோட தொடர்பு (communication) கொள்ளுங்கள்’.

மூவரிடமும் சின்னத் தயக்கம்.

‘நாற்காலி இல்லன்னா இது என்ன?’ யார் கேட்டது என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

‘என்னவா வேணா இருக்கலாம். ஆனா, நிச்சயமா இது நாற்காலி இல்லை’ என்று அழுத்தம் திருத்தமாக கூறினேன்.

இம்முறை பெண் முதலில் வந்தாள். சற்று தயக்கத்துடனும் சின்ன குழப்பங்களுடனும் பயிற்சியைச் செய்து முடித்தாள்.

அடுத்து 40 வயதுக்காரரும் யோசனைகளினூடாகவே செய்து முடித்தார்.

60 வயதுக்காரர் மிகவும் தன்னம்பிக்கையுடன் ஆரம்பித்தார். ஆனால், சட்டென அப்படியே நின்றுவிட்டார்.

‘When there is a chair in front of me, how can I imagine its not a chair’ என்று தனக்குள்ளேயே முணுமுணுத்தார், ‘ஐயம் ஸாரி. சட்டுனு ப்ளாக் (block) ஆயிடுச்சு’ என்றவர் தொடரமுடியாமல் அப்படியே சிறிது நேரம் நின்றார். பின், தன் தோல்வியை தானே நம்பமுடியாதவராக, யோசனையுடன் திரும்பி வந்து அமர்ந்து கொண்டார்.

இதுவரை நமது அறிவில் நாற்காலி என்று அழுத்தமாக பதிந்துபோன ஒன்றை திடீரென … அது அப்படியில்லை. அது வேறு ஒன்று …. என்று சொன்னால் மனம் எப்படி எளிதாக அதை ஏற்றுக் கொள்ளும்?

‘பரவால்ல. இந்த தயக்கத்தை தாண்டுறதுக்கு ஒரு எளிமையான வழியிருக்கு. அது என்னன்னா …. நீங்க குழந்தையா மாறிடணும். அதாவது ஒரு குழந்தையோட மனநிலைக்கு வந்துரணும்’ என்றேன்.

சொல்லும்போது எளிமையானதாகத் தோன்றினாலும் அது எவ்வளவு கடினமான காரியம் என்று எனக்குத் தெரியும்.

குழந்தையின் சுதந்திரமான மனநிலையை விட்டு நாம் விலகி வந்து எவ்வளவோ நாட்களாகி விட்டது. இப்போது நீங்கள் நினைத்தாலும் அந்த மனநிலைக்குள் நுழைவதென்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றுதான். இல்லையா?

ஆனால், ஒரு சிறிய பயிற்சி மூலம் அவர்களுக்கு அந்த மனநிலையைக் கொண்டுவர முயற்சி பண்ணலாமென முடிவெடுத்தேன்.

மூவரையும் ஹாலின் வெவ்வேறு மூலைகளில் அமரச் செய்தேன். நான் சொல்கின்ற குறிப்புகளை அப்படியே பின்பற்றி வருமாறு சொன்னேன்.

பின்பற்றினார்கள்தான். ஆனால், அந்தப் பெண்ணால் மட்டுமே தனது ஐந்து வயது மனநிலை வரை பயணிக்க முடிந்தது.

60 வயதுக்காரரால் பதினான்கு வயதைத் தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை. ‘அதற்கு முந்தைய பருவம் எனக்கு மிக கஷ்டமான காலம். அதை நான் நினைக்கவே விரும்புவதில்லை’ என்று விளக்கம் கொடுத்தார்.

40 வயதுக்காரரோ தான் இருபது வயது வரையே பயணித்திருப்பதாகச் சொன்னார்.

நான் மூவரையும் மீண்டும் முயற்சிக்கச் சொன்னேன். பயிற்சியின் பொருட்டேனும் முயற்சி செய்யுமாறு கூறினேன்.

இப்போதும் அந்தப் பெண்ணால் மட்டுமே எளிதாக தனது சிறுவயதுப் பருவத்துக்குள் தங்குதடையின்றி செல்ல முடிந்தது.

60 வயதுக்காரர் ‘அதிக பட்சமாக பனிரண்டு வயது. என்னால் அதை தாண்டமுடியவில்லை’ என்றார்.

இது எனக்கு புதிய அனுபவம். இதுரை நடத்திய எந்த பயிற்சிப் பட்டறையிலும் நான் எதிர்கொள்ளாத அனுபவம்.

40 வயதுக்காரர் தான் பத்து வயது வரை பயணித்ததாக கூறினார். ‘ஆனால், அங்கேயே இருக்க முடியவில்லை. உடனே மீண்டும் இருபது வயதுக்கு திரும்பி வந்துவிட்டேன். அதுதான் எனக்கு சௌகரியமான பருவமாக இருக்கிறது’ என்றார்.

நான் இந்த 40 வயதுக்காரரை ஆரம்பித்திலிருந்தே ஆழ்ந்து கவனித்துக் கொண்டுதானிருந்தேன். அவர் நெருப்பின் இயல்புகளோடு இருப்பவராக தன்னை காட்டிக் கொண்டிருந்தார்.

அவரின் உண்மை இயல்பு அதுவல்ல.

அவர் தனது இருபது வயதை தாண்டி பயணிக்க தடையாக இருந்தது எது…..? என்ற கேள்விக்குப் பின்னால் மர்ம முடிச்சுகள் கொண்ட ஒரு பெரும் ரகசியம் இருப்பது எனக்கு தெளிவாகப் புரிந்தது.


     - யதார்த்தன் இளஞ்சேரன்

நான் ஒரு நாடகக்காரன் - 2

நான் வித்யாசங்கரை பார்த்ததன் அர்த்தம் அவருக்குப் புரிந்தது. அதனாலேயே அவர் என்னை எதிர்கொள்ள முடியாமல் தன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டார்.

இந்த நாடகம் ஈழத் தமிழர் பிரச்சனை பற்றிய நாடகமல்ல. அரங்கத்தில் நிகழ்த்துவதற்கான நாடகமுமல்ல.

எங்களுக்குள் நடந்த இந்த மௌன உரையாடல் பற்றி கவலைப்படாதவராக கேபி தொடர்ந்தார் …

‘இந்த நாடகத்தை வித்தியாசமா வடிவமைச்சிருக்கேன். நாடகம் ஆரம்பிக்கிறப்ப கீழே தரைல நடக்கும். அப்புறம் நாடகத்தோட களம் கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து மேடைக்குப் போயி, மீதி நாடகம் மேடைல நடந்து முடிஞ்சிடும்.’ என்று தான் அந்த நாடகத்தை வடிவமைத்திருந்த விதத்தை விளக்கினார்.

மேடை நாடகங்களை மட்டுமே அறிவினில் ஏற்றி வைத்திருந்த எனக்கு இது மிகவும் புதுமையாகத் தோன்றியது. கேபி சொல்லச் சொல்ல, அது காட்சியாக என் மனக்கண்ணில் ஓடியது. சற்று ஆர்வம் ஏற்பட்டது.

மறுநாள் மாலை பிரதியுடன் வரச் சொன்னார். வித்யாசங்கரும் நானும் விடைபெற்றுக் கிளம்பினோம்.

எங்கள் இருப்பிடம் வந்ததும், முதல் வேலையாக பிரதியை எடுத்தேன். படித்தேன். அது ஜி.சங்கரப்பிள்ளையின் மலையாள நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூன்று பண்டிதர்களும் மாண்டதொரு சிங்கமும். மொழிபெயர்ப்பு : பேராசிரியர்     சே. ராமானுஜம். தலைப்பு எனக்கு சிறுவர் கதைக்கான தலைப்பு போலத் தோன்றியது. சிறுவயதில் படித்த அம்புலிமாமா, பொம்மைவீடு, கோகுலம், ஈசாப் நீதிக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் மற்றும் ரஷ்யமொழிச் சிறுவர் கதைகள் எல்லாம் நினைவில் வந்து போயின.

தலைப்பு மட்டுமல்ல … நாடகத்தின் உள்ளோடிய கதையும்கூட எனக்கு சிறுவர் கதையாகவே தோன்றியது.

ஒரு நாட்ல மூணு பண்டிதர்கள் இருந்தாங்களாம். அவங்க மூணு பேரும் வெவ்வேறு துறைல விற்பன்னர்கள். ஆனால், எப்பவும் தத்தம் பெருமை பேசித் திரிபவர்கள். அப்படி அவர்கள் தத்தம் பெருமை பேசித் திரியும்போது, ஒருநாள் அவங்களுக்குள்ள சண்டை வந்துருச்சு …. நான்தான் பெரியவன் … நான்தான் பெரியவன் என்று. மூணு பேரும் அவங்கவங்க திறைமையை நிரூபிக்கணும்னு முடிவு பண்ணாங்க. ஒரு காட்டுக்குள்ள போனாங்க. அங்க … ஒரு புதர்கிட்ட நிறைய எலும்புகள் சிதறிக் கெடந்துச்சு. பக்கத்துல ஒரு சிங்கத்தோட தோல் காஞ்சு கருவாடா கெடந்தது.


அதப் பாத்ததும், முதல் பண்டிதர் ‘இப்ப இந்த எலும்புகள நான் என்ன பண்றேன் பாரு’ன்னு சொல்லி, எல்லா எலும்புகளையும் எடுத்து, ஒண்ணாச் சேத்து ஒரு சிங்கத்தோட எலும்புக்கூட்டை உருவாக்கிட்டாரு. ஒடனே, ரெண்டாவது பண்டிதர் பக்கத்துல இருந்த தோலை எடுத்து, அந்த எலும்புகள் மேல மூடி, அச்சு அசலா ஒரு சிங்க உருவத்தை உண்டாக்கிட்டாரு. மூணாவது பண்டிதர் சில மந்திரங்களை ஜெபிச்சு, அந்த சிங்கத்துக்கு உயிர் கொடுத்திட்டாரு. உயிர் பெற்று எழுந்த சிங்கம், பாஞ்சு மூணு பேரையும் அடிச்சு சாப்பிட்டிருச்சு. இதான் கதை. இந்தக் கதையால் அறியப்படும் நீதி என்னனு நான் உங்களுக்குச் சொல்லணுமா என்ன? உங்களுக்கே புரிஞ்சிருக்கும்.

மறுநாள் கேபி வீட்டுக்குப் போனேன். குணசேகரன், நரசிம்மன், வெங்கட் நரசிம்மன் ஆகியோரை அறிமுகப்படுத்தி வைத்தார். மூவரும் நான் பார்த்த ‘உடல்’ நாடகத்தில் நடித்தவர்கள்.. அனைவரும் அமர்ந்து நாடகப் பிரதியை வாசித்தோம். மூன்று நாட்கள் நாடகப் பிரதி வாசிப்பில் கழிந்தது.

நான்காவது நாள் ஒத்திகைக்கான இடம் மாற்றப்பட்டது. லட்சுமிபாய் நகர் தமிழ்ப் பள்ளி.

‘கொஞ்ச நாளைக்கு ஒத்திகை கிடையாது. வொர்க்-ஷாப் மட்டும் பண்ணுவோம்’ என்றார் கேபி.

முதலில் கொஞ்சநேரம் உடற்பயிற்சிகள் செய்தோம். பொதுவாக, இந்த ஏரியாவுக்குள் கேபி அதிகமாக வருவதில்லை. வெங்கட்டிடம் ஒப்படைத்துவிடுவார். அவன்தான் யதார்த்தாவில் இருந்த ஒரே விளையாட்டு வீரன். கிரிக்கெட் நன்றாக ஆடுவான். எப்போதும் உடற்பயிற்சி வகுப்பு அவன் வசம்தான்.

உடற்பயிற்சி முடிந்தவுடன், கேபி நடிப்பு பயிற்சிப் பட்டறையைத் தொடங்கினார். இது மாதிரி பயிற்சிகள் எனக்குப் புதிது. நான் அதுவரை கேள்விப்படாதது. அதனால், சகஜத்துக்கு வர கொஞ்சம் நேரமானது. ஆனால், போகப் போக மிகவும் ஜாலியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் என்னை மறந்து பயிற்சிப் பட்டறையில் ஐக்கியமாவதற்குள் அன்றைக்கான நேரம் முடிந்து போனது.

மறுநாள்… முந்தைய நாளைவிட எளிதாக என்னால் பயிற்சிகளில் ஐக்கியமாக முடிந்தது. உண்மையில் கேபி நடத்திய நாடக பயிற்சிப் பட்டறை வித்தியாசமான விளையாட்டுகளை உள்ளடக்கியதாகவே இருந்தது. எனவே, நான் அதை முழுமகிழ்ச்சியுடன்தான் செய்தேன். என்றாலும், நான் குழுவினருடன் இரண்டறக் கலந்துவிட்டேன் என்று கூறமுடியாது. பட்டறையில் நடக்கும் பயிற்சிகளில் வெகு சிரத்தையாக கலந்து கொண்டாலும், மற்றவர்களுடன் ஒட்டாமல் அமைதியான சுபாவமுடைய ஒருவன் என்ற பிம்பத்துடனே வலம் வந்து கொண்டிருந்தேன். இதற்கிடையில் வீரமணிகண்டனும் (ஏற்கெனவே ‘உடல்’ நாடகத்தில் நடித்தவன்) இளமணியும் (என்னைப் போல் யதார்த்தாவுக்குப் புதியவன்) பயிற்சிப் பட்டறையில் இணைந்து கொண்டார்கள்.

இரண்டு நாட்கள் கழித்து பயிற்சி அட்டவணை சற்று மாறியது.

கொஞ்சநேரம் உடற்பயிற்சி. கொஞ்சநேரம் நடிப்பு பயிற்சிப் பட்டறை. கொஞ்சநேரம் நாடகப் பிரதி வாசிப்பு என்று சென்றது. எல்லாவற்றுக்கும் கொஞ்சம் கொஞ்சம் நேரமே ஒதுக்க எங்களால் முடிந்தது. ஆனாலும், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் எல்லோரும் வசனங்களை ஏறக்குறைய மனனம் செய்துவிட்டனர். எனவே, பயிற்சி அட்டவணை மீண்டும் மாறியது.

மிகக் கொஞ்ச நேரம் மட்டும் உடற்பயிற்சி. பின்பு கொஞ்ச நேரம் பயிற்சிப் பட்டறை. பின்பு ஒத்திகை.

ஒத்திகையுடன் ஆரம்பித்தது எனக்கு மீண்டும் சோதனை.

ஆம். ஒத்திகை ஆரம்பித்த முதல் நாளிலேயே எனக்கு பிரச்சனை ஆரம்பித்துவிட்டது.

கேபி  கற்றுத் தந்த பயிற்சிகளெல்லாம்  ஒரு  நடிகனின் பல்வேறு பரிமாணங்களை  வளர்த்தெடுக்கக்கூடியவைஒவ்வொரு  பயிற்சியும்  அதற்கான நோக்கத்தை  தன்னகத்துள்  ஒளித்து  வைத்திருந்தது.

இன்றைக்கு  நினைத்துப்  பார்க்கையில்  ஆச்சரியமாக  இருக்கிறது.

கேபி நாடகத்திற்கான எந்த கல்வியும் கற்றவரில்லை. அதற்கான பயிற்சிப் பட்டறைகளிலும் அதுவரை பங்கேற்றதில்லை. ஆனால், அவர் அளித்த பயிற்சிகள் ஒரு நடிகனை உருவாக்கும் திறனுடைவையாக இருந்தன; இருக்கின்றன. ஒரு பயிற்சி உடல்மொழியை பதப்படுத்தியது  என்றால்மற்றொரு  பயிற்சி  குரல்மொழியை கற்றுத் தந்தது. மற்றொன்று மன இறுக்கத்தை விலக்கி, மனதை மலரச் செய்தது. இந்த  பயிற்சிகளெல்லாம்  குழுவுக்குள்  ஒருங்கிணைந்து பணியாற்றும்  மனப்பான்மையை  நான்  அறியாமலே  எனக்குள் வி தைத்தன.

அந்த வித்துதான் …. அடுத்த சில நாட்களிலேயே நானும் ஒரு நாடகக்காரனாக உருமாற பெருங்காரணமாக இருந்தது.

கேபி கற்றுக் கொடுத்த பயிற்சிகளை புதுப்புது விளையாட்டுகள் போல் கற்றுக்கொண்ட  எனக்குநாடக  ஒத்திகைகள்  பெரும்  பாரமாக  இருந்தன.

பொதுவாகவே, பயிற்சிப் பட்டறைகள் ஒரு நடிகனை உருவாக்குமென்றால்…. பிரதியில் உள்ள கதாபாத்திரத்தின் தன்மைக்குள் அவன் சிரமமின்றி புகுந்து கொள்ளும்போதுதான் நடிகன் முழுமையடைவது நடைபெறும்.

அதற்கு நடிகன் தரப்பில் இரு செயல்கள் நடைபெற வேண்டும். பயிற்சிப் பட்டறையில் தன்னை முழுமையாக ஆசானிடம் ஒப்படைப்பது. இயக்குநர் காட்டும் வழியில் சென்று பாத்திரத்திற்குள் புகுந்து கொள்வது.

பயிற்சிப் பட்டறையில் என்னையறியாமலே முழுமையாக ஒப்படைத்த என்னால், ஒத்திகையின் போது அப்படியிருக்க முடியவில்லை. பிரதி எனக்கு இன்னும் சிறுவர் கதைகளையே நினைவூட்டிக் கொண்டிருந்தது. (உண்மையில்மூன்று பண்டிதர்களும் மாண்டதொரு சிங்கமும்சிறுவர் நாடகம்தான் என்ற தெளிவு எனக்கு பின்னாட்களில் ஏற்பட்டது).

மட்டுமல்லஅந்த நாடகத்தை கேபி வடிவமைத்த விதம் கூட என்னால் ஒப்புக் கொள்ள முடியாததாக இருந்தது. செயற்கையான அசைவுகளுடன் கூடிய உடல்மொழி மற்றும் அதீத குரல்மொழி என நான் அதுவரை அறிந்திராத ஒரு வடிவத்தில் இருந்த நாடகத்துக்குள் புகமுடியாமல் நான் கஷ்டப்பட்டது ஆச்சரியமான ஒன்றல்ல.

இன்றைக்கு அந்த வடிவத்தை என்னால் எளிதாக …. அது ஸ்டைலிஷ் தியேட்டர் என வரையறுத்துக் கூற முடியும்.

இந்த இடத்தில் ஸ்டைலிஷ் தியேட்டர் என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்குவது அவசியம் என்று நினைக்கிறேன்.

நாடகங்களை அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

1. ஸ்டைலிஷ் தியேட்டர் (பத்ததி வகை நாடகங்கள்). 2. ரியலிஸ்டிக் தியேட்டர் (யதார்த்த வகை நாடகங்கள்).

இந்த இரண்டு வகைகளையும் பற்றிய ஒரு மிகச் சுருக்கமான விளக்கத்தை கேபியின் வார்த்தைகளிலேயே தருகிறேன்.

“பத்ததி நாடக வகை என்பது  … கொஞ்சம் அழகியல் மற்றும் கற்பனையைக் கலந்து நடிகனின் அந்த நேரத்து மனோபாவத்தின் அடிப்படையில் மேடை சலனங்களை ஏதாவது ஒரு பத்ததியில் அது நாட்டிய முறையாக இருந்தாலும் சரி அல்லது கூத்து போன்ற பாரம்பரிய சலன முறையாக இருந்தாலும் சரி, அதன் வழியாக வெளிப்படுத்துவது.

உள்ளதை உள்ளவாறு எவ்வகையான மிகைப்படுத்தலும் இன்றி ஒரு காட்சியில் நடிகன் ஏற்கும் பாத்திரத்தின் மனநிலையை மேடையில் காட்சிப்படுத்துவதை யதார்த்த நாடக வகையாகக் கொள்ளலாம்.”

ஆனால், அன்றைக்கு எனக்கு முற்றிலும் அந்நியமான அந்த வடிவம் என்னை நாடகத்துக்குள் செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது .

கேபி அளித்த பயிற்சிகளை ஒத்திகைகளின்போது ஒரு நடிகனாக நான் சமயோசிதமாக பயன்பாடு செய்திருந்தால், எளிதாக நாடகத்துள்  நுழைந்திருக்க முடியும். ஆனால், பயிற்சி மற்றும் ஒத்திகைஇரண்டுக்குமிடையே கோடு போட்டு தனித்தனி எல்லைகளுக்குள் நான் வைத்திருந்ததால் நாடகத்திற்குள் புகமுடியாமல் அவஸ்தைப்பட்டேன்.

ஆனால், இந்த அவஸ்தையை உடைத்து, என்னை சகஜ பாவத்திற்கு கொண்டு வந்து ஒரு நடிகனாக்கிய புண்ணியம் கேபியையும் என் சக நடிக நண்பர்களான குணசேகரன், நரசிம்மன், வெங்கட்  ஆகியோரையும் சேரும். இவர்கள் என்னைத் தனியாக அழைத்துச் சென்று அடவுகளை செய்து காண்பித்தும் வசனங்களை பேசிக் காட்டியும் கற்றுக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள். இந்த அம்சம் யதார்த்தாவின் மிகப் பெரிய பலம்.  இந்தக்  கலாச்சாரத்திற்கும்  ஒருவகையில்  கேபிதான்  காரணமாக  இருந்தார்.
அவரைப் பற்றி அவரே கூறுவதைப் பாருங்கள்.

நான் முறையாகப் பயிற்சி பெற்ற இயக்குநன் இல்லை. என்னுடைய நாடகங்களில் மிகப்பெரும் பிரச்னை என்னவென்றால் நடிகனுடன் இயக்குபவனும் சேர்ந்து நாடகத்தை கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சவால் எப்போதுமே தொடர்ந்தே வந்தது”.

(நன்றி : ராகவன் தம்பி என்ற புனைபெயரில் கேபி எழுதியசனிமூலைதொகுப்பு).

இவ்வளவு எளிமையாக, நேர்மையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு இயக்குநரிடம் பயிற்சி பெற்றவர்கள் வேறு எப்படி இருக்க முடியும்?

கேபியின் இந்த தெளிவான தன்னுணர்தல்தான் அவரையும் குழுவின் நாடக நிகழ்வுகளையும் அடுத்தடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றதன் மூலகாரணி என்பது என் எண்ணம்.

பின்னாட்களில் நான் நாடகங்களை இயக்கும்போதும் நடிப்புப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தியபோதும் அப்படியே உணர்ந்தேன். ஒவ்வொரு நிகழ்விலும் புதிது புதிதாய் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.; கற்றுக் கொண்டிருக்கிறேன்.

சமீபத்தில்கூட ஒரு நடிப்பு பயிற்சிப் பட்டறை நடத்தினேன்பெரிய திரைப்பட நிறுவனம். மிகப் பெரிய இயக்குநர். புதுமுகங்கள் சிலருக்குநான்கு அல்லது ஐந்து பேருக்கு மட்டுமே …. பயிற்சியளிக்க வேண்டும் என்றார்கள். முதல்நாள் வகுப்பை பட அலுவலகத்திலேயே நடத்திக்கொள்ளலாமெனவும் இரண்டாவது நாளிலிருந்து வேறு இடம் ஏற்பாடு செய்துவிடுவதாகவும் சொல்லப்பட்டது.

முதல்நாளில் பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம். பங்கேற்பவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். முடிந்தால், அவர்களைப் பற்றி விவரங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டு போனேன்.

நான் எதிர்பார்த்ததற்கு மாறாக …. மூன்று பேர் மட்டுமே வந்திருந்தார்கள். சற்று ஏமாற்றமாக இருந்தது.

மிகமிக அன்அஃபிஷியலாக  வகுப்பை ஆரம்பித்தேன்.

பத்து நிமிடங்களிலேயே ….. மிகப் பெரிய சவால் என் கண்முன் இருப்பதை உணர்ந்தேன்.


-          யதார்த்தன் இளஞ்சேரன்