நான்
என்னோட நாடக உலக அனுபவங்களை எழுதணும்னு நெனச்சப்ப ரொம்ப யோசனையாத்தான் இருந்துச்சு.
மொத
பிரச்சனை …. எங்க ஆரம்பிக்கிறது?
எட்டு
வயசுல நான் இயக்கிய நாடகத்திலருந்தா? இல்ல, அதுக்கும் முன்னாலயே …. எங்க வயசொத்த பசங்க
கோலியும் கில்லியும் வெளயாண்டுக்கிட்ருந்தப்ப …. நாடகம் போட்டு வெளயாடுவோமே … அங்கருந்தா?
ம்ஹூம்.
அப்பல்லாம் நாடகம்கிறது எனக்கு வெறும் வெளயாட்டாத்தான் இருந்துச்சு. என்னை ஒரு முழுமையான
நாடகக்காரனாக்கியது தில்லி யதார்த்தா நாடகக்குழுதான். எனவே, அங்கிருந்து ஆரம்பிப்பதுதான்
முறையானது; நியாயமானது. நான்
யதார்த்தாவோடு நடிகனாக அறிமுகமாகவில்லை. ஒரு பார்வையாளனாகத்தான் அறிமுகமானேன்.
சுந்தர
ராமசாமியின் ‘உடல்’. யதார்த்தாவின் இரண்டாவது நாடகம். என்னை அழைத்துச் சென்றது நண்பர்
வித்யாசங்கர். என்னுடன் விமானப் படையில் பணிபுரிந்த சகவீரர்.
தில்லியில்
இயங்கி வந்த ‘சில்வர் ஸ்டிரீக்’ எனும் இசைக்குழுவில் வித்யாசங்கர் ஒரு பாடகர். அதில்
தப்லா வாத்தியக் கலைஞர் கே. பென்னேஸ்வரன். சுருக்கமாக எல்லோருக்கும் கேபி. இந்த கேபிதான்
யதார்த்தா நாடகக்குழுவின் இயக்குநர்.
விதி
எப்படியெல்லாம் தனது முடிச்சுகளை எசகுபிசகாகப் போடுகிறது பாருங்கள்.
நாடகம்
புதுதில்லி ஆர்.கே.புரத்தில் உள்ள தமிழ்ப்பள்ளியில் நடைபெற்றது.
மாலை
4 மணி. பள்ளியின் சிறு மைதானத்தில் பார்வையாளர்களுக்காக நாற்பது ஐம்பது நாற்காலிகள்
போட்டிருந்தார்கள்.. முன்னால் இடம் காலியாக இருந்தது.
நாடகம்
தொடங்கியது. ஒப்பனை ஏதுமின்றி …. கைலி, வேட்டி, பனியன் என சாதாரண உடைகளில் நடிகர்கள்
… இல்லையில்லை …. கதாபாத்திரங்கள் வலம் வந்தார்கள். ஆம்; அவர்கள் யாரும் நடிகர்களாகவே
தெரியவில்லை. யாரும் நடிக்க மெனக்கெடவுமில்லை. மொத்தம் ஐந்து கதாபாத்திரங்கள். இரண்டு
லோக்கல் பொறுக்கிகள், இரண்டு சாமியார்கள் … மற்றும் ஒருவர் வெண்போர்வையை தலைமுதல் கால்வரை
போர்த்திக் கொண்டு படுத்திருந்தார். இவ்வளவுதான் பாத்திரங்கள். நாடகம் ஒரு பத்தே நிமிடத்தில்
முடிந்து விட்டது …. போலத்தான் இருந்தது. ஆனால், 40 நிமிடங்கள் ஓடியிருந்தன.
நாடகம்
சுவாரசியமாகத்தான் இருந்தது. ஆனால் கலர்கலரான லைட் இல்லாமல், மேக்கப் இல்லாமல், இசைக்கு
ஓர் ஆர்மோனியப் பெட்டி இல்லாமல், குறைந்த பட்சம்
நாடகத்தின் இலக்கணமான மேடையே இல்லாமல் தரைதளத்தில் நடத்தப்பட்ட இதை ஒரு நாடகமென என்னால்
ஒத்துக்கொள்ளவே முடியவில்லை.
யதார்த்தா நிகழ்த்திய ‘உடல்’ நாடகம்
வித்யாசாகர்
‘நான் கேபியிடம் உங்களை அறிமுகப்படுத்திவிடவா? நீங்களும் நடிக்கலாமே!’ என்றபோது, அவருக்கு
நேரடியாக விடை கொடுக்காமல் மழுப்பலாக ஏதோ சொல்லி சமாளித்தேன். அது ஒருவிதமான மறுதலிப்புதான்.
அதுவரை
நான் அறிந்து வைத்திருந்த நாடக மரபுகளை யதார்த்தாவின் நாடகம் குப்பைத் தொட்டியில் தூக்கிக்
கடாசி விட்டது போல் மனம் குமைந்தது..
நானறிந்த
நாடக மரபுப்படி …. வசனம் பேசுபவர் மைக் அருகில் வந்து பேச வேண்டும். பேச ஆரம்பிக்கும்போது
கதாபாத்திரத்தைப் பார்த்துப் பேச ஆரம்பித்து, பின் பார்வையாளர் பக்கம் திரும்பிப் பேசவேண்டும்.
திரும்பும்போது முதுகைக் காட்டிக் கொண்டு திரும்பக் கூடாது … என்று பல மரபுகள் சொல்லிக்கொடுக்கப்பட்டு
எனக்குள் ஊறிப் போயிருந்தன. இவைகளெல்லாம் சேர்ந்து ஒரு இருபரிமாண அனுபவத்தையே பார்வையாளனுக்குத்
தரும் - திரைப்படங்கள் போல. நாடகப் பிரதியும் கிட்டத்தட்ட ஒரு திரைப்படத்தின் பிரதி
போலவேதான் இருக்கும். சிறுசிறு காட்சிகளின் தொகுப்பில் ஒரு நேர்கோட்டிலான கதை. திரைப்படத்தின்
ஏழ்மையான வடிவமாகவே நாடகம் உணர்வுக்குள் ஊறிப் போயிருந்தது.
அந்த
மரபுகளையெல்லாம் தூக்கியெறிந்து விட்டது ‘உடல்’ நாடகம். அதில் நடித்தவர்கள் தங்கள்
முன்னிருந்த வெளி முழுவதையும் அநாயசமாகப் பயன்படுத்தினார்கள். பிரதியிலோ கதையென்று
ஒன்றில்லை. நிகழ்வுகள் மட்டுமே. அவைகளும் சிறுசிறு காட்சிகளாக இல்லாமல் …. நாடகம் முழுவதும்
ஒரே காட்சியில் நடந்து முடிந்தது போலவே இருந்தது. அதுதான் நாடக நிகழ்வின் காலமான
40 நிமிடங்களை 10 நிமிடங்களாக உணரச் செய்து மாயாஜாலம் நிகழ்த்தியது..
சரி.
கலர்கலராய் விளக்குகள் இல்லை. ஒப்பனை இல்லை. மேடை இல்லை, பரவாயில்லை. கையாளும் பொருட்கள்கூட
எதுவும் ஸ்தூல ரூபத்தில் இல்லை. இல்லாத ஏணியைத்
தூக்கி வந்து, இல்லாத சுவரில் சார்த்திவைத்து, அந்த இல்லாத ஏணியின் மீது லாவகமாக ஏறி,
இல்லாத ஜன்னலின் வழியே எட்டிப் பார்த்தார்கள். இல்லாத மைக்கை கையில் பிடித்து ஒருவன்
முழங்க, மற்றொருவன் சட்டென ஒலிபெருக்கியாய் மாறினான். அங்கு ஏணி, சுவர், ஜன்னல், மைக்,
ஒலிபெருக்கி எதுவும் ஸ்தூலமாய் இல்லை என்பதை மறந்து பார்வையாளர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
நானும்தான். இந்த இல்லாத பொருள்களை நடிகர்கள் தங்கள் உடல்மொழியால் கண்முன் கொண்டு வந்து
காட்டினார்கள்
இப்படி
பல்வேறு விதமான வித்தியாசமான அனுபவங்களைத் தந்த ‘உடல்’ மனதுக்குள் உழன்று கொண்டே இருந்தது.
ஆனாலும், அதுவரை நான் கற்றறிந்த நாடக அறிவு அதை நாடகம் என்று ஏற்றுக் கொள்ள மறுத்துக்
கொண்டே இருந்தது.
திடீரென்று
ஒருநாள் வித்யாசங்கர் மீண்டும் யதார்த்தா பற்றி பேச்செடுத்தார். அப்போது அவர் மூன்று
விஷயங்கள் கூறினார்.
ஒன்று
: கேபி அடுத்து ஒரு நாடகம் போடுறாரு.
இரண்டு
: அது ஈழப் பிரச்சனையைப் பத்தின நாடகம்.
மூன்று : ஒரு ஆடிட்டோரியத்துல பிரம்மாண்டமான நாடகமா போடணும்னு சொன்னாரு.
நான்
சட்டென பிரகாசமானேன். ‘எப்ப கேபியப் பாக்கப் போகலாம்?’ என்று கேட்டேன்.
‘இன்னைக்கே
போலாமே’ என்றார்.
போனோம்.
முதல்
சந்திப்பிலேயே வெகுநாட்கள் பழகியவரைப் போல், கே.பி சகஜமாகப் பேச ஆரம்பித்தார். வெகு
இயல்பான நட்புடன் உபசரித்தார் ஒரு நாடகப் பிரதியை
என்னிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னார். ‘நல்லா சரளமா வாசிக்கிறே. குரலும் நல்லா இருக்கு’
என்று பாராட்டியவர், ‘இத நீயே வச்சிக்க. இதான் நாம அடுத்து போடப்போற நாடகம்’ என்று
அந்த ‘நாம்’ல் என்னையும் உரிமையுடன் சேர்த்து என்னையும் யதார்த்தாவின் ஒரு அங்கத்தினன்
ஆக்கினார் – என் அனுமதி இல்லாமலே.
நான்
வித்யாசங்கரைப் பார்த்தேன். வித்யாசங்கர் என் பார்வை தவிர்த்து வேறு பக்கம் பார்த்தார்.
-
யதார்த்தன்
இளஞ்சேரன்

No comments:
Post a Comment