Thursday, January 21, 2016

நான் ஒரு நாடகக்காரன் - 3

நான் அந்த படநிறுவனத்தின் அலுவலகத்துக்குச் சென்றேன். ஓர் உதவி இயக்குநர் என்னை ஒரு ஹாலுக்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவர் மட்டும் அமர்ந்திருந்தார்கள்.

ஒரு பெண். ஓர் ஆண்.

பெண்ணிற்கு 28-30 வயதிருக்கலாம். ஏற்கெனவே பார்த்த முகம். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் வருவார். பரவலாக ஓரளவிற்கு அறிமுகமானவர். ஆனால், தொலைக்காட்சியில் பார்த்ததைவிட இளைத்திருந்தார். ‘ஆக்சன்’ என்று சொன்னால் உடனே நடிக்க ஆயத்தமாகிவிடுவது போல் உடையணிந்திருந்தார்.

ஆணிற்கு 60 வயதிருக்கும். என்னை விட (நானே சற்று பருமனான சரீரக்காரன்தான்) இருமடங்கு சரீரத்துடன் இருந்தார்.

இருவரும் அமைதியாகவே அமர்ந்திருந்தார்கள். ஒருவருக்கொருவர் அறிமுகமில்லை போலும்.

‘இன்னொருத்தர் வந்துக்கிட்ருக்காரு.’ – உதவி இயக்குநர் சொன்னார்.

‘நாலஞ்சு பேருன்னு சொன்னீங்களே!’ என்றேன்.

‘மொத்தம் நாலு பேருதான். இன்னைக்கு மூணு பேரு மட்டும்தான். நாளைக்கு இன்னொருந்தங்க வந்து ஜாய்ன் பண்ணிக்குவாங்க’ என்றார் உதவி இயக்குநர்.

காத்திருந்தோம். சற்று நேரத்தில் அந்த இன்னொருத்தர் வந்தார். 40 வயது. நடுத்தர உடம்புவாகு. ஹாலுக்குள் இருந்த அமைதி பயந்துபோய் சட்டென வெளியேறிற்று
.
உதவி இயக்குநருக்கு ஒரு ஹலோ சொன்னவர், அந்தப் பெண்ணிடம் சரசரவென வறுத்துத் தள்ள ஆரம்பித்தார். உதவி இயக்குநர் புன்னகை மாறாமலே, இடைப் புகுந்து என்னை அவர்களுக்கும் அவர்களை எனக்கும் அறிமுகப்படுத்தினார்.

அறிமுகமென்றால், நீட்டி முழக்கி …. முழுவிபரங்களும் என்று கற்பனை செய்து கொள்ளவேண்டாம். என்னைக் காட்டி ‘இவர்தான் உங்களுக்கு ட்ரெய்னிங்க குடுக்க வந்திருக்காரு’ என்று அவர்களிடம் சொல்லிவிட்டு, அவர்களின் பெயர்களை மட்டும் சொல்லி எனக்கு அறிமுகப்படுத்திவிட்டு வெளியேறினார்.

அவர் வெளியேறியதும் ஒரு இருபத்தொன்பது வினாடிகளுக்கு அமைதி நிலவியது. அது வகுப்பை ஆரம்பிக்க எனக்கு அளிக்கப்பட்ட அவகாசம் போலும்.

மீண்டும் 40 வயதுக்காரர் பேச ஆரம்பித்தார். அந்தப் பெண்ணும் அவரும் உரையாடிக் கொண்டிருந்தார்கள். 60 வயதுக்காரரும் அந்த உரையாடலில் அவ்வப்போது கலந்து கொண்டார்.

நான் அமைதியாக அமர்ந்து அவர்கள் பேசுவதை கவனித்துக் கொண்டிருந்தேன். என்னைப் பொறுத்தவரை …. உதவி இயக்குநர் வெளியேறியதுமே வகுப்பு ஆரம்பித்துவிட்டது.

இன்றைய வகுப்பு அவர்களைப் பற்றி தெரிந்து கொள்வதுதானே? நான் ஒவ்வொருவரையும் இயல்பாக பார்ப்பதுபோல் பார்வையை வீசினாலும் வெகு உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன்
.
ஏனென்றால், அவர்களை பயிற்றுவிக்க எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் கால அவகாசம் மிகக் குறைவு.

பயிற்சியில் கலந்து கொள்ளும் அனைவருமே அவரவர் பணிகளில் மிகவும் பிஸியாக இருப்பவர்கள். வார இறுதி நாட்களில் (சனி மற்றும் ஞாயிறு) மட்டுமே அவர்களால் நேரம் ஒதுக்க முடியும். அதுவும் காலை பத்து மணியிலிருந்து மாலை நான்கு மணி வரை மட்டுமே.

இந்த விஷயங்கள் எல்லாம் முன்பே எனக்கு சொல்லப்பட்டுவிட்டன.

அடுத்த மாதம் ஷூட்டிங் தொடங்க இருப்பதால், இந்த மாதத்திற்குள் அவர்களை தயார்படுத்தியாக வேண்டும்.

எட்டு வகுப்புகள் மட்டுமே. அதில் கடைசி இரண்டு வகுப்புகள் டயலாக் பேப்பரோடு அவர்களை பயிற்றுவிக்க வேண்டி வரலாம். எனவே, அவர்களை தயார்படுத்துவதற்கென உண்மையில் இருப்பது ஆறே வகுப்புகள்தான் …. அதுவும் நேரக் கட்டுப்பாடுடன்.

இன்றைக்குள் அவர்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் சரியான பயிற்சிகளை தெரிவுசெய்து அவர்களை தீவிரமாக பயிற்றுவிக்க முடியும்.

அவர்களை ஆழ்ந்து கவனித்ததில் … ஒரு விஷயம் தெளிவாகப் புரிந்தது.

வெளிக்காட்டிக் கொள்ளாவிட்டாலும் …. மூவருமே நிறைய டென்ஷனுடன் இருந்தார்கள். பேச்சு பேச்சுவாக்கில் போய்க் கொண்டிருந்தாலும் அவர்களது கவனம் முழுக்க என்மீதே இருந்தது.

டென்ஷனுக்குக் காரணம் மிக எளிமையானது. அவர்களுக்கு நடிப்பு பயிற்சிப் பட்டறை குறித்து யாதொன்றும் தெரியாது. எனவே, என்ன மாதிரி பயிற்சி கொடுக்கப் போகிறேன் என்ற கேள்வியும் பயிற்சிகளை சிறப்பாக செய்ய வேண்டும் என்ற எண்ணமும்தான் ஓடிக் கொண்டிருக்க வேண்டும்.

இது ஒருவிதத்தில் நேர்மறையான எண்ணமாகத் தோன்றலாம். ஆனால், பயிற்சிகளில் இந்த எண்ணம் அப்படியே எதிர்மறையாக செயல்படும்.

சட்டென நான் பேச ஆரம்பித்தேன்.

‘இன்னைக்கு நான் எதுவும் பயிற்சி கொடுக்கப் போறதில்ல. இன்னைக்கு முழுக்க நான் உங்களப் பத்தி தெரிஞ்சுக்கப் போறேன்’ என்று நான் சொன்னதும் அவர்கள் முகத்தில் சட்டென ஓர் ஆசுவாசம் பரவியதை என்னால் உணரமுடிந்தது.

‘சரி. உங்களப் பத்தி நீங்களே சொல்லுங்க. நான் தெரிஞ்சுக்கிறேன்’ என்றேன்.

சற்று அமைதி நிலவியது.

‘நீங்களே ஒவ்வொருத்தரா அவங்கவங்களைப் பத்தி சொல்லுங்க.’ என்றதும் நாற்பது வயதுக்காரர் ஆரம்பித்தார் ஒரு கேள்வியுடன்.

‘என்ன சொல்லணும்?’

‘எந்தக் கட்டுப்பாடும் இல்லை. உங்களப் பத்தி என்னென்ன சொல்லணும்னு தோணுதோ, அது எல்லாத்தயும் சொல்லுங்க’ என்றதும் முதலில் அவரே ஆரம்பித்தார். அடுத்து அந்தப் பெண். கடைசியாக 60 வயதுக்காரர்.

இடையிடையே, வேண்டியபோது மட்டும், நான் சின்னச்சின்ன கேள்விகள் கேட்டு பதில்கள் வாங்கினேன்.

அவர்கள் பேசியது முழுவதையும் இங்கு சொல்வதென்றால் நீண்டுகொண்டே போகும். எனவே, சுருக்கமாக அவர்கள் சொன்னதை இங்கே தருகிறேன்.

60 வயதுக்காரர் ….. சாஃப்ட்வேர் கம்பெனிகளை அதற்கான ஒரு டீமுடன்  உருவாக்கி பின் அதை விற்றுவிடுவது இவரது தொழில். இயக்குநரின் நண்பர். இவரது வீட்டிலுள்ள ஹோம் தியேட்டரில் இயக்குநருடன் அமர்ந்து பானம் அருந்தியவாறு உலகத் திரைப்படங்கள் பார்ப்பது பிடித்தமான பொழுதுபோக்கு. பார்ப்பது மட்டுமே. நடிக்கும் ஆசை வந்ததேயில்லை. திடீரென இயக்குநர் நடிக்குமாறு சொல்ல, ஒத்துக் கொண்டுவிட்டார். நடிப்பை தொழிலாகத் தொடரும் எண்ணம் அறவே இல்லை.

28 வயது பெண் ….. “தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்குபெறுவது எனது வேலை. சினிமாவில் நடிக்கும் எண்ணம் இருந்ததில்லை. இயக்குநரின் குடும்ப நண்பர். நடிக்கச் சொன்னார். ஒத்துக்கொண்டேன். இந்தக் காலம் எனது வாழ்வில் பெரிய பிரச்சனைகள் நடந்து கொண்டிருக்கும் ஓர் இக்கட்டான காலம். எனது வருங்கால வாழ்க்கை இப்படியே தொலைக்காட்சியோடு முடிந்து விடுமா? அடுத்து என்ன? என்ற கேள்வி எழுந்து விஸ்வரூபமாய் நிற்கும் காலம். இதிலிருந்து மீண்டு சற்று நம்பிக்கை கொடுக்கும் விதமாய் இந்த வாய்ப்பு. இது தொடருமா என்பதையெல்லாம் இப்போது என்னால் சொல்லமுடியவில்லை.”

40 வயது ஆண் …. நிறையப் பேசினார். ஆனால், தெளிவற்று அங்குமிங்கும் பேச்சு தாவிக் கொண்டே இருந்தது. இடையில் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களிலிருந்து மட்டுமே அவரைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு கல்லூரியின் அறக்கட்டளைத் தலைவர். குடும்ப உறுப்பினர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வது அவரது மற்றொரு வேலை. இவை தவிர, அவருக்கு மிக முக்கியமான ஒரு வேலை இருக்கிறது. அது …. விருந்துகளில் கலந்து கொள்வது. அவரது பள்ளிக்காலங்களில் சின்னதாய் ஆரம்பித்த விருந்துகள் இப்போது பெரிதாகி, பெரும்பாலான நாட்களில் விருந்து முடிந்து வீடு திரும்ப இரவு இரண்டு மணி ஆகிவிடும். அவர் விருந்து கொடுப்பார் …. அல்லது நண்பர்கள் அளிக்கும் விருந்துகளில் கலந்து கொள்வார். நாம் பெரிய பிரமுகர்கள் என்று நினைக்கும் பலர் அவரது நெருங்கிய நட்பு வட்டத்தில். இவருக்கும் நடிக்கும் ஆசையெல்லாம் இருந்ததில்லை. இயக்குநரின் குடும்ப நண்பர். இயக்குநர் நடிக்கச் சொன்னார். ஒத்துக் கொண்டார். நடிப்பைத் தொடர்வதா இல்லையா என்று எந்த முடிவும் இதுவரை இல்லை.

இதுவரை நான் நடிப்புப் பயிற்சி அளித்ததெல்லாம் …. சினிமாவே வாழ்க்கை என்ற உறுதி கொண்டு நடிப்பார்வத்துடன் …. இல்லையில்லை … வெறியுடன் அலைபவர்கள்.  இப்போது என் முன் இருப்பது வேறுமாதிரியானதொரு சூழல். ஆனால், நான் இதையும் எதிர்கொண்டுதான் …. இல்லை …. நேர்கொண்டுதான் ஆகவேண்டும்.

இவர்கள் யார்? என்று தெரிந்து கொண்டாகி விட்டது. அடுத்து, இவர்கள் என்ன? என்று தெரிந்து கொள்ள வேண்டும். (ஆங்கிலத்தில் …. Who are they?க்கும் what are they?க்கும் உள்ள வேறுபாடுதான்). அப்போதுதான் இவர்களுக்கான பாடத்திட்டங்களை வகுக்க முடியும்.

ஹாலைச் சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டேன். வாகாய் இருந்தது நாற்காலிகள் மட்டுமே. ஒரு நாற்காலியை எடுத்து ஹாலின் நடுவே வைத்தேன்.

‘இந்த நாற்காலியை நீங்கள் பயன்படுத்தவேண்டும்.’

‘பயன்படுத்தணும்னா …. எப்படி?’ நீங்கள் நினைத்தது சரிதான்.            40 வயதுக்காரர்தான்.

‘எந்தக் கட்டுப்பாடும் கிடையாது. இது ஒரு நாற்காலிங்கிறத மனசுல வச்சுக்கிட்டு அதை விதவிதமா பயன்படுத்தணும். அது … வெறும் பயன்படுத்துதலா இல்லாம … அந்த நாற்காலியோட ஒரு தொடர்பை  உண்டாக்கணும்’.

ஒவ்வொருவராக வந்து கொடுத்த பயிற்சியை கச்சிதமாகச் செய்தார்கள்.      60 வயதுக்காரரிடம் மட்டும் இடையிடையே சின்னத் தயக்கம். மற்றபடி பெரிதாக எந்தப் பிரச்சனையும் இல்லை.

‘இப்ப … இது நாற்காலி இல்லை. இப்ப இதோட தொடர்பு (communication) கொள்ளுங்கள்’.

மூவரிடமும் சின்னத் தயக்கம்.

‘நாற்காலி இல்லன்னா இது என்ன?’ யார் கேட்டது என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை.

‘என்னவா வேணா இருக்கலாம். ஆனா, நிச்சயமா இது நாற்காலி இல்லை’ என்று அழுத்தம் திருத்தமாக கூறினேன்.

இம்முறை பெண் முதலில் வந்தாள். சற்று தயக்கத்துடனும் சின்ன குழப்பங்களுடனும் பயிற்சியைச் செய்து முடித்தாள்.

அடுத்து 40 வயதுக்காரரும் யோசனைகளினூடாகவே செய்து முடித்தார்.

60 வயதுக்காரர் மிகவும் தன்னம்பிக்கையுடன் ஆரம்பித்தார். ஆனால், சட்டென அப்படியே நின்றுவிட்டார்.

‘When there is a chair in front of me, how can I imagine its not a chair’ என்று தனக்குள்ளேயே முணுமுணுத்தார், ‘ஐயம் ஸாரி. சட்டுனு ப்ளாக் (block) ஆயிடுச்சு’ என்றவர் தொடரமுடியாமல் அப்படியே சிறிது நேரம் நின்றார். பின், தன் தோல்வியை தானே நம்பமுடியாதவராக, யோசனையுடன் திரும்பி வந்து அமர்ந்து கொண்டார்.

இதுவரை நமது அறிவில் நாற்காலி என்று அழுத்தமாக பதிந்துபோன ஒன்றை திடீரென … அது அப்படியில்லை. அது வேறு ஒன்று …. என்று சொன்னால் மனம் எப்படி எளிதாக அதை ஏற்றுக் கொள்ளும்?

‘பரவால்ல. இந்த தயக்கத்தை தாண்டுறதுக்கு ஒரு எளிமையான வழியிருக்கு. அது என்னன்னா …. நீங்க குழந்தையா மாறிடணும். அதாவது ஒரு குழந்தையோட மனநிலைக்கு வந்துரணும்’ என்றேன்.

சொல்லும்போது எளிமையானதாகத் தோன்றினாலும் அது எவ்வளவு கடினமான காரியம் என்று எனக்குத் தெரியும்.

குழந்தையின் சுதந்திரமான மனநிலையை விட்டு நாம் விலகி வந்து எவ்வளவோ நாட்களாகி விட்டது. இப்போது நீங்கள் நினைத்தாலும் அந்த மனநிலைக்குள் நுழைவதென்பது கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்றுதான். இல்லையா?

ஆனால், ஒரு சிறிய பயிற்சி மூலம் அவர்களுக்கு அந்த மனநிலையைக் கொண்டுவர முயற்சி பண்ணலாமென முடிவெடுத்தேன்.

மூவரையும் ஹாலின் வெவ்வேறு மூலைகளில் அமரச் செய்தேன். நான் சொல்கின்ற குறிப்புகளை அப்படியே பின்பற்றி வருமாறு சொன்னேன்.

பின்பற்றினார்கள்தான். ஆனால், அந்தப் பெண்ணால் மட்டுமே தனது ஐந்து வயது மனநிலை வரை பயணிக்க முடிந்தது.

60 வயதுக்காரரால் பதினான்கு வயதைத் தாண்டி உள்ளே செல்ல முடியவில்லை. ‘அதற்கு முந்தைய பருவம் எனக்கு மிக கஷ்டமான காலம். அதை நான் நினைக்கவே விரும்புவதில்லை’ என்று விளக்கம் கொடுத்தார்.

40 வயதுக்காரரோ தான் இருபது வயது வரையே பயணித்திருப்பதாகச் சொன்னார்.

நான் மூவரையும் மீண்டும் முயற்சிக்கச் சொன்னேன். பயிற்சியின் பொருட்டேனும் முயற்சி செய்யுமாறு கூறினேன்.

இப்போதும் அந்தப் பெண்ணால் மட்டுமே எளிதாக தனது சிறுவயதுப் பருவத்துக்குள் தங்குதடையின்றி செல்ல முடிந்தது.

60 வயதுக்காரர் ‘அதிக பட்சமாக பனிரண்டு வயது. என்னால் அதை தாண்டமுடியவில்லை’ என்றார்.

இது எனக்கு புதிய அனுபவம். இதுரை நடத்திய எந்த பயிற்சிப் பட்டறையிலும் நான் எதிர்கொள்ளாத அனுபவம்.

40 வயதுக்காரர் தான் பத்து வயது வரை பயணித்ததாக கூறினார். ‘ஆனால், அங்கேயே இருக்க முடியவில்லை. உடனே மீண்டும் இருபது வயதுக்கு திரும்பி வந்துவிட்டேன். அதுதான் எனக்கு சௌகரியமான பருவமாக இருக்கிறது’ என்றார்.

நான் இந்த 40 வயதுக்காரரை ஆரம்பித்திலிருந்தே ஆழ்ந்து கவனித்துக் கொண்டுதானிருந்தேன். அவர் நெருப்பின் இயல்புகளோடு இருப்பவராக தன்னை காட்டிக் கொண்டிருந்தார்.

அவரின் உண்மை இயல்பு அதுவல்ல.

அவர் தனது இருபது வயதை தாண்டி பயணிக்க தடையாக இருந்தது எது…..? என்ற கேள்விக்குப் பின்னால் மர்ம முடிச்சுகள் கொண்ட ஒரு பெரும் ரகசியம் இருப்பது எனக்கு தெளிவாகப் புரிந்தது.


     - யதார்த்தன் இளஞ்சேரன்

No comments:

Post a Comment