நான்
வித்யாசங்கரை பார்த்ததன் அர்த்தம் அவருக்குப் புரிந்தது. அதனாலேயே அவர் என்னை எதிர்கொள்ள
முடியாமல் தன் பார்வையை வேறுபுறம் திருப்பிக் கொண்டார்.
இந்த
நாடகம் ஈழத் தமிழர் பிரச்சனை பற்றிய நாடகமல்ல. அரங்கத்தில் நிகழ்த்துவதற்கான நாடகமுமல்ல.
எங்களுக்குள்
நடந்த இந்த மௌன உரையாடல் பற்றி கவலைப்படாதவராக கேபி தொடர்ந்தார் …
‘இந்த
நாடகத்தை வித்தியாசமா வடிவமைச்சிருக்கேன். நாடகம் ஆரம்பிக்கிறப்ப கீழே தரைல நடக்கும்.
அப்புறம் நாடகத்தோட களம் கொஞ்சம் கொஞ்சமா நகர்ந்து மேடைக்குப் போயி, மீதி நாடகம் மேடைல
நடந்து முடிஞ்சிடும்.’ என்று தான் அந்த நாடகத்தை வடிவமைத்திருந்த விதத்தை விளக்கினார்.
மேடை
நாடகங்களை மட்டுமே அறிவினில் ஏற்றி வைத்திருந்த எனக்கு இது மிகவும் புதுமையாகத் தோன்றியது.
கேபி சொல்லச் சொல்ல, அது காட்சியாக என் மனக்கண்ணில் ஓடியது. சற்று ஆர்வம் ஏற்பட்டது.
மறுநாள்
மாலை பிரதியுடன் வரச் சொன்னார். வித்யாசங்கரும் நானும் விடைபெற்றுக் கிளம்பினோம்.
எங்கள்
இருப்பிடம் வந்ததும், முதல் வேலையாக பிரதியை எடுத்தேன். படித்தேன். அது ஜி.சங்கரப்பிள்ளையின்
மலையாள நாடகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு. மூன்று பண்டிதர்களும் மாண்டதொரு சிங்கமும்.
மொழிபெயர்ப்பு : பேராசிரியர் சே. ராமானுஜம்.
தலைப்பு எனக்கு சிறுவர் கதைக்கான தலைப்பு போலத் தோன்றியது. சிறுவயதில் படித்த அம்புலிமாமா,
பொம்மைவீடு, கோகுலம், ஈசாப் நீதிக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள் மற்றும் ரஷ்யமொழிச்
சிறுவர் கதைகள் எல்லாம் நினைவில் வந்து போயின.
தலைப்பு
மட்டுமல்ல … நாடகத்தின் உள்ளோடிய கதையும்கூட எனக்கு சிறுவர் கதையாகவே தோன்றியது.
ஒரு
நாட்ல மூணு பண்டிதர்கள் இருந்தாங்களாம். அவங்க மூணு பேரும் வெவ்வேறு துறைல விற்பன்னர்கள்.
ஆனால், எப்பவும் தத்தம் பெருமை பேசித் திரிபவர்கள். அப்படி அவர்கள் தத்தம் பெருமை பேசித்
திரியும்போது, ஒருநாள் அவங்களுக்குள்ள சண்டை வந்துருச்சு …. நான்தான் பெரியவன் … நான்தான்
பெரியவன் என்று. மூணு பேரும் அவங்கவங்க திறைமையை நிரூபிக்கணும்னு முடிவு பண்ணாங்க.
ஒரு காட்டுக்குள்ள போனாங்க. அங்க … ஒரு புதர்கிட்ட நிறைய எலும்புகள் சிதறிக் கெடந்துச்சு.
பக்கத்துல ஒரு சிங்கத்தோட தோல் காஞ்சு கருவாடா கெடந்தது.
அதப்
பாத்ததும், முதல் பண்டிதர் ‘இப்ப இந்த எலும்புகள நான் என்ன பண்றேன் பாரு’ன்னு சொல்லி,
எல்லா எலும்புகளையும் எடுத்து, ஒண்ணாச் சேத்து ஒரு சிங்கத்தோட எலும்புக்கூட்டை உருவாக்கிட்டாரு.
ஒடனே, ரெண்டாவது பண்டிதர் பக்கத்துல இருந்த தோலை எடுத்து, அந்த எலும்புகள் மேல மூடி,
அச்சு அசலா ஒரு சிங்க உருவத்தை உண்டாக்கிட்டாரு. மூணாவது பண்டிதர் சில மந்திரங்களை
ஜெபிச்சு, அந்த சிங்கத்துக்கு உயிர் கொடுத்திட்டாரு. உயிர் பெற்று எழுந்த சிங்கம்,
பாஞ்சு மூணு பேரையும் அடிச்சு சாப்பிட்டிருச்சு. இதான் கதை. இந்தக் கதையால் அறியப்படும்
நீதி என்னனு நான் உங்களுக்குச் சொல்லணுமா என்ன? உங்களுக்கே புரிஞ்சிருக்கும்.
மறுநாள்
கேபி வீட்டுக்குப் போனேன். குணசேகரன், நரசிம்மன், வெங்கட் நரசிம்மன் ஆகியோரை அறிமுகப்படுத்தி
வைத்தார். மூவரும் நான் பார்த்த ‘உடல்’ நாடகத்தில் நடித்தவர்கள்.. அனைவரும் அமர்ந்து
நாடகப் பிரதியை வாசித்தோம். மூன்று நாட்கள் நாடகப் பிரதி வாசிப்பில் கழிந்தது.
நான்காவது
நாள் ஒத்திகைக்கான இடம் மாற்றப்பட்டது. லட்சுமிபாய் நகர் தமிழ்ப் பள்ளி.
‘கொஞ்ச
நாளைக்கு ஒத்திகை கிடையாது. வொர்க்-ஷாப் மட்டும் பண்ணுவோம்’ என்றார் கேபி.
முதலில்
கொஞ்சநேரம் உடற்பயிற்சிகள் செய்தோம். பொதுவாக, இந்த ஏரியாவுக்குள் கேபி அதிகமாக வருவதில்லை.
வெங்கட்டிடம் ஒப்படைத்துவிடுவார். அவன்தான் யதார்த்தாவில் இருந்த ஒரே விளையாட்டு வீரன்.
கிரிக்கெட் நன்றாக ஆடுவான். எப்போதும் உடற்பயிற்சி வகுப்பு அவன் வசம்தான்.
உடற்பயிற்சி
முடிந்தவுடன், கேபி நடிப்பு பயிற்சிப் பட்டறையைத் தொடங்கினார். இது மாதிரி பயிற்சிகள்
எனக்குப் புதிது. நான் அதுவரை கேள்விப்படாதது. அதனால், சகஜத்துக்கு வர கொஞ்சம் நேரமானது.
ஆனால், போகப் போக மிகவும் ஜாலியாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நான் என்னை மறந்து பயிற்சிப்
பட்டறையில் ஐக்கியமாவதற்குள் அன்றைக்கான நேரம் முடிந்து போனது.
மறுநாள்…
முந்தைய நாளைவிட எளிதாக என்னால் பயிற்சிகளில் ஐக்கியமாக முடிந்தது. உண்மையில் கேபி
நடத்திய நாடக பயிற்சிப் பட்டறை வித்தியாசமான விளையாட்டுகளை உள்ளடக்கியதாகவே இருந்தது.
எனவே, நான் அதை முழுமகிழ்ச்சியுடன்தான் செய்தேன். என்றாலும், நான் குழுவினருடன் இரண்டறக்
கலந்துவிட்டேன் என்று கூறமுடியாது. பட்டறையில் நடக்கும் பயிற்சிகளில் வெகு சிரத்தையாக
கலந்து கொண்டாலும், மற்றவர்களுடன் ஒட்டாமல் அமைதியான சுபாவமுடைய ஒருவன் என்ற பிம்பத்துடனே
வலம் வந்து கொண்டிருந்தேன். இதற்கிடையில் வீரமணிகண்டனும் (ஏற்கெனவே ‘உடல்’ நாடகத்தில்
நடித்தவன்) இளமணியும் (என்னைப் போல் யதார்த்தாவுக்குப் புதியவன்) பயிற்சிப் பட்டறையில்
இணைந்து கொண்டார்கள்.
இரண்டு
நாட்கள் கழித்து பயிற்சி அட்டவணை சற்று மாறியது.
கொஞ்சநேரம்
உடற்பயிற்சி. கொஞ்சநேரம் நடிப்பு பயிற்சிப் பட்டறை. கொஞ்சநேரம் நாடகப் பிரதி வாசிப்பு
என்று சென்றது. எல்லாவற்றுக்கும் கொஞ்சம் கொஞ்சம் நேரமே ஒதுக்க எங்களால் முடிந்தது.
ஆனாலும், அடுத்த இரண்டு மூன்று நாட்களில் எல்லோரும் வசனங்களை ஏறக்குறைய மனனம் செய்துவிட்டனர்.
எனவே, பயிற்சி அட்டவணை மீண்டும் மாறியது.
மிகக்
கொஞ்ச நேரம் மட்டும் உடற்பயிற்சி. பின்பு கொஞ்ச நேரம் பயிற்சிப் பட்டறை. பின்பு ஒத்திகை.
ஒத்திகையுடன்
ஆரம்பித்தது எனக்கு மீண்டும் சோதனை.
ஆம். ஒத்திகை ஆரம்பித்த முதல் நாளிலேயே எனக்கு பிரச்சனை ஆரம்பித்துவிட்டது.
கேபி கற்றுத் தந்த பயிற்சிகளெல்லாம் ஒரு நடிகனின்
பல்வேறு பரிமாணங்களை வளர்த்தெடுக்கக்கூடியவை. ஒவ்வொரு பயிற்சியும் அதற்கான நோக்கத்தை தன்னகத்துள் ஒளித்து வைத்திருந்தது.
இன்றைக்கு
நினைத்துப் பார்க்கையில் ஆச்சரியமாக இருக்கிறது.
கேபி நாடகத்திற்கான எந்த கல்வியும் கற்றவரில்லை. அதற்கான பயிற்சிப் பட்டறைகளிலும் அதுவரை பங்கேற்றதில்லை. ஆனால், அவர் அளித்த பயிற்சிகள் ஒரு நடிகனை உருவாக்கும் திறனுடைவையாக இருந்தன; இருக்கின்றன. ஒரு பயிற்சி உடல்மொழியை பதப்படுத்தியது என்றால், மற்றொரு பயிற்சி குரல்மொழியை கற்றுத் தந்தது. மற்றொன்று மன இறுக்கத்தை விலக்கி, மனதை மலரச் செய்தது. இந்த பயிற்சிகளெல்லாம் குழுவுக்குள் ஒருங்கிணைந்து பணியாற்றும் மனப்பான்மையை நான் அறியாமலே எனக்குள் வி
தைத்தன.
அந்த வித்துதான் …. அடுத்த சில நாட்களிலேயே நானும் ஒரு நாடகக்காரனாக உருமாற பெருங்காரணமாக இருந்தது.
கேபி கற்றுக் கொடுத்த பயிற்சிகளை புதுப்புது விளையாட்டுகள் போல் கற்றுக்கொண்ட எனக்கு, நாடக ஒத்திகைகள் பெரும் பாரமாக இருந்தன.
பொதுவாகவே, பயிற்சிப் பட்டறைகள் ஒரு நடிகனை உருவாக்குமென்றால்….
பிரதியில் உள்ள கதாபாத்திரத்தின் தன்மைக்குள் அவன் சிரமமின்றி புகுந்து கொள்ளும்போதுதான் நடிகன் முழுமையடைவது நடைபெறும்.
அதற்கு நடிகன் தரப்பில் இரு செயல்கள் நடைபெற வேண்டும். பயிற்சிப் பட்டறையில் தன்னை முழுமையாக ஆசானிடம் ஒப்படைப்பது. இயக்குநர் காட்டும் வழியில் சென்று பாத்திரத்திற்குள் புகுந்து கொள்வது.
பயிற்சிப் பட்டறையில் என்னையறியாமலே முழுமையாக ஒப்படைத்த என்னால், ஒத்திகையின் போது அப்படியிருக்க முடியவில்லை. பிரதி எனக்கு இன்னும் சிறுவர் கதைகளையே நினைவூட்டிக் கொண்டிருந்தது. (உண்மையில் ‘மூன்று பண்டிதர்களும் மாண்டதொரு சிங்கமும்’ சிறுவர் நாடகம்தான் என்ற தெளிவு எனக்கு பின்னாட்களில் ஏற்பட்டது).
மட்டுமல்ல … அந்த நாடகத்தை கேபி வடிவமைத்த விதம் கூட என்னால் ஒப்புக் கொள்ள முடியாததாக இருந்தது. செயற்கையான அசைவுகளுடன் கூடிய உடல்மொழி மற்றும் அதீத குரல்மொழி என நான் அதுவரை அறிந்திராத ஒரு வடிவத்தில் இருந்த நாடகத்துக்குள் புகமுடியாமல் நான் கஷ்டப்பட்டது ஆச்சரியமான ஒன்றல்ல.
இன்றைக்கு அந்த வடிவத்தை என்னால் எளிதாக …. அது ஸ்டைலிஷ் தியேட்டர் என வரையறுத்துக் கூற முடியும்.
இந்த இடத்தில் ஸ்டைலிஷ் தியேட்டர் என்றால் என்ன என்று கொஞ்சம் விளக்குவது அவசியம் என்று நினைக்கிறேன்.
நாடகங்களை அடிப்படையில் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கலாம்.
1. ஸ்டைலிஷ் தியேட்டர் (பத்ததி
வகை நாடகங்கள்). 2. ரியலிஸ்டிக் தியேட்டர்
(யதார்த்த வகை நாடகங்கள்).
இந்த
இரண்டு வகைகளையும் பற்றிய ஒரு மிகச் சுருக்கமான விளக்கத்தை கேபியின் வார்த்தைகளிலேயே
தருகிறேன்.
“பத்ததி நாடக வகை என்பது … கொஞ்சம் அழகியல் மற்றும் கற்பனையைக் கலந்து நடிகனின் அந்த நேரத்து மனோபாவத்தின் அடிப்படையில் மேடை சலனங்களை ஏதாவது ஒரு பத்ததியில் அது நாட்டிய முறையாக இருந்தாலும் சரி அல்லது கூத்து போன்ற பாரம்பரிய சலன முறையாக இருந்தாலும் சரி, அதன் வழியாக வெளிப்படுத்துவது.
உள்ளதை உள்ளவாறு எவ்வகையான மிகைப்படுத்தலும் இன்றி ஒரு காட்சியில் நடிகன் ஏற்கும் பாத்திரத்தின் மனநிலையை மேடையில் காட்சிப்படுத்துவதை யதார்த்த நாடக வகையாகக் கொள்ளலாம்.”
ஆனால்,
அன்றைக்கு எனக்கு முற்றிலும் அந்நியமான அந்த வடிவம் என்னை நாடகத்துக்குள் செல்லவிடாமல் தடுத்துக் கொண்டிருந்தது .
கேபி அளித்த பயிற்சிகளை ஒத்திகைகளின்போது ஒரு நடிகனாக நான் சமயோசிதமாக பயன்பாடு செய்திருந்தால், எளிதாக நாடகத்துள் நுழைந்திருக்க முடியும். ஆனால், பயிற்சி மற்றும் ஒத்திகை – இரண்டுக்குமிடையே கோடு போட்டு தனித்தனி எல்லைகளுக்குள் நான் வைத்திருந்ததால் நாடகத்திற்குள் புகமுடியாமல் அவஸ்தைப்பட்டேன்.
ஆனால்,
இந்த அவஸ்தையை உடைத்து, என்னை சகஜ பாவத்திற்கு கொண்டு வந்து ஒரு நடிகனாக்கிய புண்ணியம்
கேபியையும் என் சக நடிக நண்பர்களான குணசேகரன், நரசிம்மன், வெங்கட் ஆகியோரையும் சேரும். இவர்கள்
என்னைத் தனியாக அழைத்துச் சென்று அடவுகளை செய்து காண்பித்தும் வசனங்களை பேசிக் காட்டியும் கற்றுக் கொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.
இந்த அம்சம் யதார்த்தாவின் மிகப் பெரிய பலம். இந்தக் கலாச்சாரத்திற்கும் ஒருவகையில் கேபிதான் காரணமாக இருந்தார்.
அவரைப் பற்றி அவரே கூறுவதைப் பாருங்கள்.
“நான் முறையாகப் பயிற்சி பெற்ற இயக்குநன் இல்லை. என்னுடைய நாடகங்களில் மிகப்பெரும் பிரச்னை என்னவென்றால் நடிகனுடன் இயக்குபவனும் சேர்ந்து நாடகத்தை கற்றுக் கொள்ள வேண்டிய ஒரு சவால் எப்போதுமே தொடர்ந்தே வந்தது”.
(நன்றி : ராகவன் தம்பி என்ற புனைபெயரில் கேபி எழுதிய ‘சனிமூலை’ தொகுப்பு).
இவ்வளவு எளிமையாக, நேர்மையாக தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ஒரு இயக்குநரிடம் பயிற்சி பெற்றவர்கள் வேறு எப்படி இருக்க முடியும்?
கேபியின் இந்த தெளிவான தன்னுணர்தல்தான் அவரையும் குழுவின் நாடக நிகழ்வுகளையும் அடுத்தடுத்த கட்டத்துக்கு அழைத்துச் சென்றதன் மூலகாரணி என்பது என் எண்ணம்.
பின்னாட்களில் நான் நாடகங்களை இயக்கும்போதும் நடிப்புப் பயிற்சிப் பட்டறைகள் நடத்தியபோதும் அப்படியே உணர்ந்தேன். ஒவ்வொரு நிகழ்விலும் புதிது புதிதாய் பல விஷயங்களை கற்றுக் கொண்டேன்.; கற்றுக் கொண்டிருக்கிறேன்.
சமீபத்தில்கூட ஒரு நடிப்பு பயிற்சிப் பட்டறை நடத்தினேன். பெரிய திரைப்பட நிறுவனம். மிகப் பெரிய இயக்குநர். புதுமுகங்கள் சிலருக்கு … நான்கு அல்லது ஐந்து பேருக்கு மட்டுமே …. பயிற்சியளிக்க வேண்டும் என்றார்கள். முதல்நாள் வகுப்பை பட அலுவலகத்திலேயே நடத்திக்கொள்ளலாமெனவும்
இரண்டாவது நாளிலிருந்து வேறு இடம் ஏற்பாடு செய்துவிடுவதாகவும் சொல்லப்பட்டது.
முதல்நாளில் பயிற்சிகளை ஆரம்பிக்க வேண்டாம். பங்கேற்பவர்களை அறிமுகப்படுத்திக் கொள்ளலாம். முடிந்தால், அவர்களைப் பற்றி விவரங்கள் தெரிந்து கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டு போனேன்.
நான் எதிர்பார்த்ததற்கு மாறாக …. மூன்று பேர் மட்டுமே வந்திருந்தார்கள். சற்று ஏமாற்றமாக இருந்தது.
மிகமிக அன்அஃபிஷியலாக வகுப்பை
ஆரம்பித்தேன்.
பத்து நிமிடங்களிலேயே ….. மிகப் பெரிய சவால் என் கண்முன் இருப்பதை உணர்ந்தேன்.
-
யதார்த்தன்
இளஞ்சேரன்
No comments:
Post a Comment